ஆசியக் கிண்ணம் (Asia Cup ) என்பது பல நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ணத்தை வளர்த்தெடுப்பதற்காக 1983 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு போட்டியாகும். ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்போட்டி நடாத்தப்பட்டு வந்த நிலையில் முதலாவது ஆசியக் கிண்ணம் 1984இல் அமீரகத்தில் சார்ஜாவில் இடம் பெற்ற நிலையில் பாகிஸ்தான் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பங்கு பற்றின. அந்த வகையில் இந்திய அணி முதலாவது ஆசியக் கிண்ணத்தை வென்றது.
இரண்டாவது ஆசிய கிண்ணப் போட்டி 1986இல் இலங்கையில் இடம் பெற்ற நிலையில் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வென்று ஆசிய கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
மூன்றாவது ஆசிய கிண்ணப் போட்டி 1988 இல் வங்காள தேசத்தில் இடம்பெற்ற நிலையில் நான்கு அணிகள் பங்கு பற்றிய இப்போட்டியில் இறுதிச்சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வென்று ஆசிய கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
நான்காவது போட்டி 1990 இல் இந்தியாவில் இடம்பெற்ற நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வென்று ஆசியக் கிண்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
ஐந்தாவது போட்டி 1995இல் சார்ஜாவில் இடம்பெற்ற நிலையில் மீண்டும் நான்காவது தடவையாக இலங்கை அணியை வென்று இந்திய அணி ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது.
ஆறாவது போட்டி 1997இல் இலங்கையில் இடம் பெற்ற நிலையில் இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை வென்றது.
ஏழாவது ஆசியக்கிண்ணப் போட்டிகள் 2000 ஆம் ஆண்டில் வங்காள தேசத்தில் நிகழ்ந்தன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வென்று முதல் தடவையாக ஆசிய கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
எட்டாவது போட்டி 2004 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றன. இம்முறை ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி மற்றும் ஹொங்கொங் துடுப்பாட்ட அணி ஆகியன முதன்முறையாக பங்கு பற்றின. இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 25 ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தில் வென்று ஆசியக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
ஒன்பதாவது போட்டி 2008 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இடம்பெற்ற நிலையில் இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வென்று நான்காவது தடவையாக ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.
பத்தாவது போட்டி 2010 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம் பெற்ற நிலையில் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை வென்று ஐந்தாவது தடவையாக ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.
பதினோராவது போட்டி 2012 ஆம் ஆண்டில் வங்காள தேசத்தில் இடம்பெற்ற நிலையில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கு பற்றின. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வங்காள தேசத்தை இரண்டு ஓட்டங்களால் வென்றது.
பன்னிரண்டாவது போட்டி 2014 ஆம் ஆண்டில் வங்காள தேசத்தில் இடம்பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணியினர் முதன்முதலாக இப் போட்டியில் பங்கு பற்றினர். இறுதிச்சுற்றில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை ஒன்று ஆசிய கிண்ணத்தை ஐந்தாவது தடவையாக பெற்றுக் கொண்டது.
13-வது போட்டி 2016 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற நிலையில் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது.
2021 ஆம் ஆண்டில் இடம்பெறவிருந்த ஆசிய கிண்ணப் போட்டி COVID - 19 பெரும் தொற்று காரணமாக முதலில் 2020 ஆம் ஆண்டிலும் அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டிலும் இரத்து செய்யப்பட்டது.
அந்த வகையில் 15 வது ஆசிய கிண்ணப் போட்டி 2022 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்ற நிலையில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி ஆசியக்கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது.16வது ஆசியகிண்ணப்போட்டி 2023 ஆம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட் வடிவில் இலங்கையிலும் பாகிஸ்தானிலும் இடம்பெற்ற நிலையில் இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து 17வது ஆசியக்கிண்ணப் போட்டி 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வகையில் இப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை பங்காளதேஷ் ஆப்கானிஸ்தான் ஓமான் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய 8 அணிகள் பங்கு பற்றுகின்றன. அமுதாபியில் எட்டு போட்டிகளும் துபாயில் பதினொரு போட்டிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆசியக் கிண்ணப்போட்டி வரலாற்றை உற்று நோக்கும் வகையில் இந்த 41 ஆண்டுகளில் முதன்முறையாக பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் விளையாட உள்ளனர். எத்தனையோ வெற்றிகளைக் கடந்து வந்த இந்திய அணி இன்று முதன் முதலாக பாகிஸ்தான் அணியுடன் இறுதிச்சுற்றை விளையாடுவது என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனம்.